மானாமதுரை சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா; நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2024 05:04
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணமும், நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம், கமலம், குதிரை, யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் வீதி உலா நடைபெறும். இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 6ம் நாளான இன்று கீழமேல்குடி கிராமத்தார்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியாவிடையுடன் தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகள் இரட்டை சப்பரங்களில் வீதி உலா சென்று கழுவேற்றும் பொட்டலில் சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிளான திருக்கல்யாணம் நாளை ஏப்.21ம் தேதி காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், ஏப்.22ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் சோமசுந்தர பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.