பதிவு செய்த நாள்
21
ஏப்
2024
11:04
பாலக்காடு; பாலக்காட்டில் நிறுவும் சங்கர மடத்தின் பூமி பூஜை வெகு விமர்சையாக நடந்தன.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், நாடு முழுவதும் சங்கர மடங்களை ஏற்படுத்தி, நமது வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை கற்றுக் கொடுத்து வருகிறது. கேரளாவில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கீழ் உள்ள காலடியில் ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம், கஞ்சிக்கோட்டில் உள்ள சிவன் கோவில், திருவனந்தபுரம் கரமனாவில் உள்ள சங்கர மடம், திருவனந்தபுரம், ராமநாதபுரம், இரிஞ்சாலக்குடாவில் உள்ள பாடசாலைகள், வேதக் கற்றலை ஆதரித்தல், வேத பாராயணம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன், கேரளாவில் பாலக்காடு, கல்பாத்தி சாத்தபுரத்தில் ஸ்ரீ சங்கர மடம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பாலக்காடு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராச்சார்யா சேவா சமிதி அறக்கட்டளை வாயிலாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பூமி பூஜை நேற்று கல்பாத்தி சாத்தபுரம் அக்ரஹாரத்தில் காலை, 8:00 முதல் காலை, 9:00 வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மேலாளர் (எஸ்டேட்ஸ்) வைத்தியநாதன், ஸ்ரீ காஞ்சி காமகோடி அக்னி கோத்திர பாதுகாப்பு சபை செயலாளர் பாலகிருஷ்ணன், ஸ்ரீ காஞ்சி காமாட்சி கோவில் முக்கிய புரோகிதர் ஷ்யாம சாத்திரி, காஞ்சிபுரம் சந்திரசேகர கனபாடி, பாலக்காடு காஞ்சி சங்கர சேவா சமிதி அறக்கட்டளை செயலாளர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பூமி பூஜை நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவிஷாம் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோவையைச் சேர்ந்த பட்டய கணக்காளர் சுப்பிரமணியன், சாத்தபுரம் சமூக செயலாளர் முரளி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.