பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
07:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (ஏப்., 21) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வந்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று வெகு விமரிசையாக துவங்கியது. மீனாட்சி ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை மற்றொரு தேரிலும், மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1.10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
கள்ளழகருக்கு எதிர்சேவை: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் நேற்று (ஏப்., 21) கள்ளழகர் புறப்பட்டார். இன்று காலை மதுரை வந்தடைந்த கள்ளழகருக்கு, மதுரை புதுார் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர்.