அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2024 11:04
மதுரை: அழகர்கோவில்: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். நாளை (மே 22) காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவையும்; நாளை காலை 7.45 மணிக்கு வைகை ஆற்றிலும் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்கள் பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று, தோளுக்கினியாள் அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் கோயிலை வலம் வந்தார். கண்டாங்கி பட்டு உடுத்தி, தங்கப்பல்லக்கில் மாலை 5.35 மணிக்கு மதுரைக்கு கள்ளழகர் புறப்பட்டார்; பின், கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்,18ம்படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று மாலை 6.40 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா என்ற முழக்கத்துடன் அழகரை வழி அனுப்பினர். இரவு முழுவதும் பயணிக்கும் கள்ளழகர், நாளை காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருவார்; அங்கு எதிர் சேவை நடக்கும். நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.