பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
11:04
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள சத்ய சாய் பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உண்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய மனித விழுமியங்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நாளை உலக மனித மதிப்புகள் தினமாக SSSIO கொண்டாடுகிறது. ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவத்தை முன்னிட்டு, பகவானின் கல்வி நிறுவனங்களின் மாணவர்களும், ஊழியர்களும் கூட்டாக தங்கள் மனமார்ந்த நன்றியை ஆத்மார்த்தமான பாடல்கள் மூலம் வழிபட்டனர். "தெய்வீகத்தைத் தவிர வேறெதுவும் நிரந்தரமானது இல்லை. நம் அன்பினால் அவனை அடைய வேண்டும்" என்று பகவான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இன்று காலை 8:00 மணி - வேத பாரயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை 8:15 மணிக்கு சாய் பஞ்சரத்ன கிருதிகள், காலை 9:05 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எஸ்.நாகானந்த் அறிமுக உரை, காலை 9:10 மணிக்கு நிமிஷ் பாண்டியா, AIP, உரை நடைபெற்றது.காலை 9:25 மணிக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். காலை 9:55 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு, காலை 10:15 மணிக்கு பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மாலை 5:00 மணி - வேதம், மாலை 5:30 மணி - திருமதி நந்தினி ராவின் பக்தி இசை நிகழ்ச்சி, மாலை 6:20 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது.