பழநி; பழநி கோயில் யானை கஸ்தூரி வெயிலின் தாக்கத்தை குறைக்க குளு குளு குளியல் போட்டது.
பழநி கோயில் யானை கஸ்தூரி 58, பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுகிறது. கோயில் யானை தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா, தேரோட்டங்களிலும், கந்த சஷ்டி திருவிழா உட்பட அனைத்து விழாக்களிலும் பங்கேற்கிறது. கோயில் யானை அதிக வயதுடையதால் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது. பழநி, காரமடை அருகே உள்ள தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு யானை கஸ்தூரி குளிக்க, கோயில் சார்பில் நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டது. தினமும் யானை பாகன்களின் அறிவுறுத்தல்படி காலையில் ஷவரிலும், மாலையில் குளத்திலும் யானை குளிக்க வைக்கப்படுகிறது. இயற்கை சூழலில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளதால் யானை குதூகலமாக குளு குளு என குளித்து மகிழ்ச்சி அடைகிறது. வெயிலின் தாக்கம் குறைக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.