பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
நகரி: திருமலையில், கூடுதல் லட்டுகள் பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஒருவருக்கு நான்கு லட்டுகள் மட்டுமே வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், சாமி தரிசனம் செய்யும் பக்தர் ஒருவருக்கு, இரண்டு லட்டு வீதம் வழங்கப்படுகிறது. வி.ஐ.பி., தரிசனம், ஆர்ஜித சேவை, 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், 50 ரூபாய் கட்டண தரிசனம் செய்பவர்களுக்கு, இரண்டு லட்டுகள் வழங்கப்படுகிறது. இவர்களில், கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு, கோவிலுக்கு வெளியே, தெப்பக்குளம் அருகே, தனி கவுன்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்டு, 25 ரூபாய் வீதம், 100 ரூபாய்க்கு, நான்கு லட்டுகளுக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கோவிலுக்கு செல்லாத பக்தர்களும், பணம் செலுத்தி, இந்த டோக்கனை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. பின், லட்டு கவுன்டரில் கொடுத்து, லட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்கு சென்று வரும் பக்தர்கள் சிலர், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவதற்கென, லட்டு கவுன்டர்களுக்கு திரும்ப திரும்ப சென்று, அதிக எண்ணிக்கையில் லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதே போல் தரகர்கள் சிலர், திரும்ப திரும்ப லட்டு கவுன்டர்களுக்கு சென்று லட்டுகளை வாங்கி, கூடுதல் விலைக்கு, விற்று பணம் சம்பாதித்தனர். இதனால், உண்மையான பக்தர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்திடம் புகார் கூறினர். இதையடுத்து, நேற்று முன்தினம் தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு,திருமலையில், லட்டு கவுன்டர்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் லட்டு கவுன்டர் அருகே சிலர், திரும்ப திரும்ப வந்து லட்டு டோக்கன்களை வாங்கிச் செல்வதைக் கண்டார்.இதை தடுக்க, புதிய சாப்ட்வேர் முறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், லட்டு டோக்கன் வாங்க வரும் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும். இதனால் ஒருவருக்கு, ஒரு நாளுக்கு, நான்கு லட்டுகள் பெற்றுக் கொள்வதற்கான ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்னும் இரண்டு வாரங்களில், அமல்படுத்தப்பட உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.