பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தில் குறிப்பிட்டு 3 வகை மரணங்களில் ஒன்று உடல்ரீதியான மரணம். இதுவே அனைவருக்கும் தெரிந்த மரணமாகும். பிறக்க ஒரு காலமுண்டு: இறக்க ஒரு காலமுண்டு என்று சபை உரையாளர் 3:2-ல் சொல்லப் பட்டுள்ளது. இந்த உடல் ரீதியான மரணத்தை இயேசு கிறிஸ்து நித்திரை என்று சொன்னார். யவீருவின் மகனை உயிரோடு எழுப்பும் போது அவன் நித்திரையாயிருக்கிறான் என்று சொல்லி தூங்கிக் கொண்டிருக்கிற ஒரு குழந்தையை எழுப்புவதைப்போல உயிரோடு எழுப்பிக் கொடுத்தார். அப்படியே நாயீனூர் விதவையின் மகனையும், மரித்த லாசருவையும் நித்திரையிலிருந்து ஒரு மனிதனை எழுப்புவதைப் போல உயிரோடு எழுப்பினார். நம்முடைய பார்வையிலே மரணமாக தோன்றுவது கர்த்தருடைய பார்வையிலே நித்திரையாயிருக்கிறது. இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் மரணம், இந்த மரணம் ஒரு பாக்கியமான மரணம். மகிமையான மரணம். இது குறித்து விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு 14:3-ல் கர்த்தருக்குள் இறப்பவர்கள் இது முதல் பாக்கியவான்கள். அவர்கள் தங்கள் வேதனைகளை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவது வகை மரணம் நித்திய மரணம் . உலகின் இறுதி தீர்ப்பின் போது பாவியாயிருக்கிற மனிதன் நித்திய வேதனைக்கு நேராய் போவான். மேலே குறிப்பிடப்பட்டவைகளில் முதல் வகை மரணம் இயற்கையானது; எல்லோருக்கும் பொதுவானது; ஆனால், இந்த வகை மரணத்தை இரண்டாவது வகையான மரணமாக அமைத்துக் கொள்ளுதல் மிகவும் சிறப்பானது. இவர்கள் நேராக விண்ணுலக வாழ்வுக்குள் நுழைந்து எப்பொழுதும் இறைவனோடு இருப்பவர்கள். மூன்றாவது வகை மரணத்திற்கு நாம் உட்படாமல் தப்பித்து விண்ணுலகம் செல்ல முயற்சிக்க வேண்டும். அந்த ஆன்மாவிற்கு அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த சமயத்தில் தம்மீது படியவிட்ட பாவக்கறைகளின் அளவைப் பொறுத்து ஜெபங்களும், தவங்களும் தேவைப்படுகிறது. அந்த ஜெப உதவியையும், தவப்பயனையும் அந்த ஆன்மாக்களுக்கு தரவேண்டியது இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுஇருக்கும் பெற்றோர், உறவினர் களின் கடமையாகும். இதையே, உயிர்தெழுதல் என கூறுகிறோம். உயிர்த்தெழுதலின் நம்பிக்கை கிறிஸ்தவ மார்க்கத்தின் முதுகெலும்பைப் போல காணப்படுகிறது. உயிர்தெழுதலின் நம்பிக்கை இல்லாவிட்டால் முதுகெலும்பு இல்லாத ஒரு மனிதனைப் போலவே கிறிஸ்தவம் காணப்படும். கிறிஸ்து உயிர்தெழுந்து விண்ணுலகத்தில் அடியெடுத்து வைத்து வீற்றிருப்பதால் அவரை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் அந்த மகா பரிசுத்த இடத்திற்குள் நுழையும் படி வாசல் கதவுகளை திறந்த வைத்திருக்கிறார்.
மரித்தவர்கள் மீண்டும் எழும்புவார்கள் என்ற நம்பிக்கையையும், அதன் பின் விண்ணுலக வாழ்வில் நுழைவார்கள் என்ற உறுதியையும் தனது உயிர்ப்பின் மூலம் கர்த்தர் நமக்கு தந்திருக்கிறார். நானே உயிர்த்தெழுதலும், உயிருமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் இறந்தாலும் உயிர்வாழ்வான் என்கிறார் (அருளப்பர் நற்செய்தி 11:25:26) இயேசுகிறிஸ்து. மேலும், அவர் இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உபதேசித்ததால் கொடிய மரணதண்டனைக்கு ஆளாக வேண்டி யிருந்தது. இறந்த பின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, தான் உயிர்த்தெழும் முன் மூன்று நாட்கள் அதில் துயில் கொண்டிருந்தால், அனைத்து கல்லறைகளும் புனிதமாக்கப் பட்டதாக நம்பப்படுகிறது. ஆகவே கல்லறை திருநாளில் தங்களின் உறவினர்களின் கல்லறைகளில் ஒளி ஏற்றி, மலர்தூவி ஜெபித்து தங்களின் புனித கடமையை நிறைவேற்ற வேண்டும். -ஆ.ஆல்பர்ட் உபகாரசாமி