ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ராஜ கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கிறிஸ்தவ பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்கச்சிமடம் ஊராட்சி ராஜா நகரில் உள்ள பழமையான ராஜகணபதி கோயிலில் புதுப்பித்து திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் 1ம், 2ம் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 3ம் கால யாகசாலை பூஜை முடிந்ததும், பூரணாஹூதி பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து குருக்கள் புனித நீரை கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தினர். பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின் ராஜகணபதி மற்றும் பரிவார் கோயில்களில் மகா தீபாராதனை நடந்தது. இதில் தங்கச்சிமடம் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பூஜை பொருட்களுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது.