பதிவு செய்த நாள்
05
நவ
2012
10:11
நகரி: ஆங்கில புத்தாண்டு தினமான, 2013 ஜன., 1ம் தேதி, திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, தரிசன டிக்கெட் விற்பனை செய்ய, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.புத்தாண்டு தினத்தில், வெங்கடேச பெருமானை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள், திருமலைக்கு வருவர். அன்று மட்டும், ஒரு லட்சம் பேர், தரிசனம் செய்வர்; தரிசனம் கிடைக்காத பலர், கோபுர தரிசனம் செய்து, வீடு திரும்புவர்.
இது தவிர, ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து, மறுநாள் சாமி தரிசனம் செய்வர். கூட்டம் காரணமாக, பலர், சாமி தரிசனம் செய்ய முடியாமல், அதிருப்தியுடன் திரும்பிச் செல்வதைத் தவிர்க்க, 50 ரூபாய் கட்டணத்தில், அன்று சாமி தரிசனம் செய்ய புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது.
புத்தாண்டு தினத்தில், சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள, திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் உட்பட, பல இடங்களிலும் உள்ள கவுன்டர்களில், தரிசன டிக்கெட்டுகள், வரும் 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.இந்த டிக்கெட்டை வாங்கும் பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், சாமி தரிசனத்திற்கு செல்லலாம். இவர்கள், தனி வரிசை மூலம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.இத்தகவலை, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.