பதிவு செய்த நாள்
05
நவ
2012
10:11
சபரிமலை: மண்டல உற்சவத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 35 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை, 14 லட்சம் டின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 16ம் தேதி, மண்டல உற்சவம் துவங்குகிறது. அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடைபெற உள்ள, இந்த உற்சவத்தின் போது, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவர்.அவர்களுக்கு, அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்கள் விற்கப்படும்.
இந்தாண்டு, மண்டல உற்சவ காலத்தில் மட்டும், 35 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதில், 14 லட்சம் டின்கள், இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, அப்பம் தயாரிக்கும் பணி, வரும், 10ம் தேதி துவங்கும். மண்டல உற்சவ காலத்தில், தினமும், இரண்டு லட்சம் அரவணை டின்கள், விற்பனையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும். மண்டல உற்சவ காலம் துவங்கும், வரும் 16ம் தேதி முதல், பக்தர்களுக்கு தினமும், காலையில், ரவா உப்புமா, கொண்டைக்கடலை கறி மற்றும் சுக்கு காபியும், மதிய நேரத்தில், சாதம், சாம்பார், ரசம், பொறியல், அவியல் மற்றும் ஊறுகாயும், இரவில் கஞ்சி, பயிறு கறி மற்றும் ஊறுகாயும் அன்னதானமாக வழங்கப்படும்.
மண்டல உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும்,15ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்த மாதம், 26ம் தேதி, மண்டல உற்சவம் முடிந்து நடை அடைக்கப்படும்.அதன்பின், மகரஜோதி உற்சவத்திற்காக, அடுத்த மாதம், 30ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படும்; மகரஜோதி தரிசனம், அடுத்தாண்டு ஜனவரி, 14ம் தேதி நடக்கும்.