பதிவு செய்த நாள்
11
மே
2024
10:05
பல்லடம்; காடுகள் எல்லாம் வீடுகள் ஆனதன் காரணமாக, இன்று மழையே பெய்வதில்லை என, பல்லடத்தில், காமாட்சிபுரி ஆதீனம் வேதனை தெரிவித்தார்.
பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் வளாகத்தில், மழை வளம் பெருகி, நீர்நிலைகள் செழிக்க வேண்டி நீர் வழிபாடு நடந்தது. வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். இயக்குனர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: கோவில்களை கட்டினால் போதாது. அதை பராமரித்து, தினசரி வழிபாடுகள் செய்ய உதவ வேண்டும். காடுகள் எல்லாம் வீடுகள் ஆனதால் மழையே பெய்வதில்லை. சரஸ்வதி அருள் கடாட்சம் இல்லையெனில் எந்த வேலை செய்தாலும் சிக்கலாகிவிடும். இன்று குடிப்பழக்கம் காரணமாக, யார் தாய் தந்தை, கணவன் மனைவி என்பதே தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த அவல நிலை மாற வேண்டும். நான்கு யுகத்தில் கடைசியாக கலியுகத்தில் உள்ளோம். எனவே, இப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கும். கொரோனாவை யாராலும் தடுக்க முடிந்ததா? மழை வந்தால் நாடே சுபிட்சம் அடையும். கல்வி, செல்வம், ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும். கடவுளைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும். இன்று நாடே கெட்டுப் போய் கிடக்கிறது. யார் பேச்சையும் யாரும் கேட்பதில்லை. அம்மா அப்பா சொன்னாலே கேட்காதவர்கள் அமைச்சர் சொன்னால் கேட்டு விடுவார்களா? முதலில் நாம் நம்மை சரிபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் சரியாக இருந்தால், வீடும், நாடும் சந்தோஷமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அட்சய திருதியை முன்னிட்டு, மழை வேண்டி நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. வனம் அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.