அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 01:05
மயிலாடுதுறை; கருங்குயில் நாதன் பேட்டையில் நடைபெற்ற அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சக்தி புரீசுவர சுவாமி கோவிலில் உப கோவிலான பூர்ண, புஷ்கலா சமேத அய்யனார் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 11ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணஹூதி மற்றும் மகா தீபாரதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மல்லாரி இசை முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தன. வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.