பதிவு செய்த நாள்
13
மே
2024
04:05
நத்தம், நத்தம் - கோவில்பட்டி பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர் கைலாசநாதர். செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 21ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது. மறுநாள் பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி வியாழக்கிழமை காலை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. முன்னதாக கொடியேற்ற விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், நகர அவைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.