பதிவு செய்த நாள்
13
மே
2024
05:05
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருத்தணி முருகன் கோவில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
காலையில் செல்லும் பக்தர்கள் மதியம் 12:00 மணிக்குள் கீழ் இறங்குகின்றனர். 11:00 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் மாலை வரை அங்கே இருந்து பொழுதை கழித்து மாலை 4:00 மணிக்கு மேல் கீழ் இறங்குகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் இரவு 8 :00 மணி வரை கீழ் இறங்குகின்றனர். இங்கு காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீமிதி விழாவில் காப்பு கட்டிய பக்தர்கள் என வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் காலை, 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலிலும், மலைக்கோவில் தேர் வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.
முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். கொளுத்தும் வெயிலால் பக்தர்கள் நலன்கருதி தேர்வீதியில் தரைவிரிப்பு அமைத்து அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதுதவிர தேர்வீதிக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், வெள்ளப்பானகம், கேசரி, வெண்பொங்கல், கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் மற்றும் புளியோதரை என காலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேர்வீதி முழுதும் நான்கு பக்கங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுகிறது.