பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதியில், சித்திரை திருவிழாவிற்கு பின், 16 கிலோ தங்கத்தில், புதிய கொடிமரத்தை பிரதிஷ்டை செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இக்கோவிலில், திருவிழா துவங்கியதை அறிவிக்க, சுவாமி சன்னிதி எதிரே பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இம்மரம் செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை. பல நூற்றாண்டு பழமையான தேக்கு வகையைச் சேர்ந்த இம்மரத்தில், ஆங்காங்கு பழுது ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு செங்கோட்டை வனப்பகுதியில் இருந்து, 62 அடி உயர தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோவில் வடக்காடி வீதியில் செதுக்கும் பணி நடந்தது. ஆகமவிதிப்படி, தற்போதைய கொடிமர வடிவமைப்பில் செதுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், இம்மரத்திற்காக, 16 கிலோ தங்கத்தை பயன்படுத்த அரசு அனுமதியளித்தது. அடுத்தடுத்து திருவிழா நடக்கவிருப்பதால், அடுத்தாண்டு சித்திரை திருவிழாவிற்கு பின், தங்க கொடிமரத்தை பிரதிஷ்டை செய்ய, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.