பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
ஸ்ரீரங்கத்தில் 1,000 ஆன்மிக பயணிகள் தங்கும் வகையில் அமைக்கப்படும், ஆன்மிக விடுதிக்கான பணிகள் துவங்கின. குவியும் கூட்டம் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு, ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்கள், திருச்சியிலிருந்தே செல்வர். மேலும், ஸ்ரீரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு, ஆர்வம் காட்டுவர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால், தனியார் விடுதிகளையே நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக, பக்தர்களுக்காக தமிழக அரசு, "யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி அமைக்கிறது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஆகிய கோவில்களுக்கு வரும் ஆன்மிக பக்தர்கள், தங்கி, இறையருள் பெற, ஸ்ரீரங்கத்தில் உள்ள, வெள்ளி திருமுத்தம் கிராமத்தில், 6.48 ஏக்கர் நிலப்பரப்பில், 42.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விடுதி அமைய உள்ளது.
பல்வேறு வசதிகள்: இதில், துகில் கூடம், உணவு விடுதி, தங்கும் அறைகள் என, பல வசதிகள் கொண்ட அறைகள் அமைக்கப்பட இருக்கின்றன. மேலும், தனிநபர் தங்கும் விடுதிகள், குடும்பத்துடன் தங்கும் விடுதிகள் என, அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது தவிர, பொது கழிப்பறை அறைகள், கடைகள், முடி காணிக்கை செலுத்தும் இடம் என, 10 தொகுப்புகளுடன் கூடிய, 20 கட்டடங்கள் அமைய இருக்கின்றன. இதில், 1,000 பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் தீவிரம்: இத்திட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் தொகையை, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நிதியிலிருந்தும் செலவிட, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருச்சி மண்டல பொதுப்பணித் துறை (கட்டடம்) உயர் அதிகாரிகள் கூறுகையில், "கூடிய விரைவில் பணிகளை முடிக்க, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.