போலீசாரின் காவல் தெய்வம்; வீச்சு கருப்பணசுவாமி கோயில் திருவிழா நாளை முதல் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 03:05
பெரியகுளம்; பெரியகுளம் போலீசாரின் குடும்பங்களின் காவல் தெய்வமாக திகழும் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா இன்று முதல் துவங்குகிறது.
பெரியகுளம் சப் -டிவிஷன் உட்பட்ட தென்கரை, வடகரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷனுகளில் போலீசார் குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட காவல் தெய்வமாக வீச்சு கருப்பண சுவாமி கோயில் பெரியகுளம் கச்சேரி ரோட்டில் உள்ளது. சப்-டிவிஷன் உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிய வெளியூரில் இருந்து பணி மாற்றத்தில் வரும் போலீசார் முதல் டி.எஸ்.பி., வரை வீச்சு கருப்பண சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பணியில் சேர்வது வழக்கம். நேர்த்திக்கடனுக்காக ஏராளமான போலீசார் கோயிலுக்கு வீச்சு அரிவாள் வாங்கி தந்துள்ளனர். மே 7 ல் திருவிழாவிற்கு காப்பு கட்டுதல், சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண் போலீசார் உட்பட நூற்றுக்கும் அதிகமான போலீசார் கையில் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். நாளை (மே 21) முதல் மே 23 வரை 3 நாட்கள் திருவிழா நடக்கிறது. சக்தி கரகம் எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், முளைப்பாரி உள்ளிட்ட விசேஷ வைபவங்கள் நடக்க உள்ளது. 53 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஐம்பொன் வீச்சு கருப்பணசுவாமி உற்ஸவர் சிலையை உபயதாரர் வழங்கியுள்ளார். ஏற்பாடுகளை பூசாரி முருகன், சப்-டிவிஷன் போலீசார் செய்து வருகின்றனர்.