சூரியனூர் கிராமத்தில் பெரிய காண்டி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2024 11:05
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ மாறப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த 22 ஆம் தேதி முக்கொம்பு காவிரி நதியில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு யாக பூஜைகள் நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் இருந்த கும்பத்தில் உள்ள புனித நீரை எடுத்துக் கொண்டு சிவாச்சாரியார்கள் மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பிறகு கோவில் மேல் உள்ள கலசத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதேபோல் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. கோவிலை சுற்றி திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.. விழாவிற்கான ஏற்பாட்டினை மேலப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குடிப்பாட்டுக்காரர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் கே. என். நேரு, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், குளித்தலை திமுக ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் குளித்தலை அருகே மணத்தட்டை ஊராட்சி எழுநூற்று மங்கலம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஆச்சி அம்மன் காமாட்சி, அம்மன், மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு கிராம பொதுமக்கள், பக்தர்கள், சுற்று பகுதி கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.