ஜூன் 1 முதல் திருமலையில் ஹனுமன் ஜெயந்தி விழா; பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 12:05
திருப்பதி; அஞ்சனாத்ரி ஆகாச கங்கா கோவிலில், ஜபாலி தீர்த்தத்தில் ஜூன் 1 முதல் 5 வரை அனுமன் ஜெயந்தியை கொண்டாட திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த ஐந்து நாட்களும் ஆகாச கங்கையில் உள்ள ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமி மற்றும் ஸ்ரீ அஞ்சனாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தவும், ஜபாலி தீர்த்தத்தில் கூட்டு அனுமன் சாலிசா பாராயணத்தை நடத்தவும் தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
ஆகாச கங்கையில் உள்ள அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆகாச கங்கையில் உள்ள ஸ்ரீ அஞ்சனாதேவி-ஸ்ரீ பாலஞ்சநேய சுவாமி கோவிலில் இந்த ஐந்து நாட்களும் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஜூன் 1-ஆம் தேதி மல்லிகைப் பூக்களால் அபிஷேகம், ஜூன் 2-ஆம் தேதி வெற்றிலை, ஜூன் 3-ஆம் தேதி சிவப்பு குண்டர் மற்றும் கனகாம்பரம், ஜூன் 4-ஆம் தேதி வேப்பிலை, கடைசி நாளில் சிந்துரம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மந்திரங்கள் முழங்க வேத பண்டிதர்களால் ஸ்ரீ ஆஞ்சநேய சஹஸ்ர நாமார்ச்சனை மற்றும் அஞ்சனாதேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு ஆகாச கங்கையில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜனன கதை நிகழ்ச்சி நடக்கிறது.
அனுமன் சாலிசா பாராயணம் தாச சாகித்ய திட்டத்தின் மூலம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படும். ஜூன் 1ல் ஹரிகதா, ஜூன் 2ல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் சங்கீர்த்தனங்கள், ஜூன் 3ல் புரந்தரதாச சங்கீர்த்தனங்கள், ஜூன் 4ல் இந்து தர்ம பிரசார் பரிஷத்தின் பஜனை, ஜூன் 5ல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் ஹரிகதா பாடல். தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை எஸ்.வி.சங்கீத் மற்றும் நிருத்யா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாத நீரஜனம் மேடையில் ஸ்ரீ அனுமனின் பிறப்பு மற்றும் ஸ்ரீ அனுமன் தொடர்பான சுவாரஸ்யமான தலைப்புகளில் புகழ்பெற்ற வேத பண்டிதர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.