நவதிருப்பதி, நவகைலாய கோயில்கள் உள்ள தென்திருப்பேரையை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்; பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 12:05
ஆழ்வார்திருநகரி ; ஆன்மிக பூமியான தென்திருப்பேரையில் அரசு பஸ்கள் நின்று செல்லாததால் கிராம மக்கள், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தென்திருப்பேரையில் நவத்திருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோயில் உள்ளது. அதேபோல் நவ கைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் கோயிலும் இங்கு அமைந்துள்ளது. மேலும், தென்திருப்பேரை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலையம்மன் கோயில் உள்ளது. ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலுக்குச் செல்ல தென்திருப்பேரை வழியாகத்தான் செல்ல வேண்டும். தென்திருப்பேரையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், தென்திருப்பேரை டவுண் பஞ்சாயத்து, அரசு மேல்நிலைப்பள்ளியும், கா உதவி துவக்கக் கல்வி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பணிகளுக்காக தென்திருப்பேரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். மேலும் இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. இதனால் பல கிராம மக்கள் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்வார்கள். திருநெல்வேலி - திருச்செந்துார் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தென்திருப்பேரையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பஸ்சுக்காக இப்பகுதி மக்களும், பல்வேறு பணிகளுக்காகவும், கோயில்களுக்கும் வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
அதிகாரிகளிடம் புகார் ; இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போது பெரும்பாலான பஸ்கள் நின்று செல்ல அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. தென்திருப்பேரையில் அரசு பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் தென்திருப்பேரை மற்றும் அதைச்சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் துாரம் உள்ள ஆழ்வார்திருநகரி அல்லது குரும்பூருக்கு சென்று தான் அங்கிருந்து தனியார் பஸ்கள் அல்லது தனியார் வாகனங்களில் தான் வர வேண்டிய சூழல் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் ஏதாவது பஸ்சில் திருநெல்வேலியில் இருந்தோ அல்லது திருச்செந்துாரில் இருந்தோ ஏறி வந்தால் தென்திருப்பேரை எங்களுக்கு ஸ்டேஜ் கிடையாது குரும்பூர் அல்லது ஆழ்வார் திருநகரியில் தான் நாங்கள் நிறுத்துவோம் என கூறுகின்றனர். அப்போது நாங்கள் வேறு வழியில்லாமல் நீங்கள் குரும்பூர் ஸ்டேஜ் அல்லது ஆழ்வார் திருநகரி ஸ்டேஜ் போட்டு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் எங்கள் ஊரில் நின்று செல்லுங்கள் என்று கூறினாலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் நிறுத்த மறுக்கின்றனர் என வேதனைப் படுகின்றனர். எனவே ஆன்மீக சிறப்பு பெற்ற தென்திருப்பேரையில் அரசு பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.