பதிவு செய்த நாள்
31
மே
2024
10:05
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டு தோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா, கருத்தரங்கம், சமய பயிற்சி வகுப்பு, திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோவில் திருவிழா வைகாசி மாசத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 10ம் திருநாள் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்தியான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11ஆம் திருநாள் குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் நடப்பது வழக்கம். பட்டினப்பிரதேசத்தில் குரு மகா சன்னிதானத்தை சீவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று ஆதீன திருமடத்தில் 4 வீதிகள் சுற்றி வந்து ஞானகுரு காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்குவது வழக்கம். மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் பல்லுக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஆர்டிஓ. பாலாஜி தடை விதித்தார். அதன் பிறகு பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அரசு அந்த தடையை நீக்கியது. இதனால் பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி பிரபலமானது. கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
29ஆம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது. தொடர்ந்து நேற்று குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சொக்கநாதர் பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபட்டார். மாலையில் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோவில் மற்றும் மேல குருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரவு 10 மணி அளவில் தருமை ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருஆபரணங்கள் அணிந்து, திருக்கூட்ட அடியார்கள் படைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்துள்ளார். ஆதீன 4 வீதிகளிலும் பூரண கும்ப மரியாதையுடன் பக்தர்கள் குரு மகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 27 வது மகா சன்னிதானம் ஞான கொலுக் காட்சியில் எழுந்துள்ள திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பாவன அபிஷேகம் செய்து வைத்து மகா தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்திய ஞான பரமாச்சாரியார் சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பிரமாச்சார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சுவாமிகள், தருமை ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.