பதிவு செய்த நாள்
31
மே
2024
10:05
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்று இரவு துவங்கினார். ஓம் மந்திரம் பின்னணியில் முழங்க, விவேகானந்தர் சிலை எதிரே அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.
இதையொட்டி, குமரி முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட மோடி, நேற்று மாலை 5:06 மணிக்கு கன்னியாகுமரி அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு வந்தார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். 5:40க்கு அங்கிருந்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
வரவேற்றனர்: கோவிலை, 20 நிமிடங்கள் வலம் வந்து, தேவியை தரிசனம் செய்தார். பின், 6:05க்கு காரில் படகு தளத்துக்கு சென்றார். அவர் பயணித்த படகு, விவேகானந்தர் பாறைக்கு மாலை 6:15க்கு சென்றடைந்தது. விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர். அங்குள்ள மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு, ஏசி வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அறையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கவும், மற்றொன்று பிரதமருக்கு உணவு தயாரிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் வந்திறங்கியது முதல் பாறைக்கு செல்லும் வரை, கடற்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இரண்டு கப்பல்கள் மற்றும் 10 அதிநவீன படகுகளில், கடலோர காவல் படையினர் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் முகாமிட்டு, பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணியரை தடுக்க வேண்டாம் என, பிரதமர் அலுவலகம் கூறியிருந்தாலும், நேற்று காலை 11:00 மணிக்கு பின் படகுகள் இயக்கப்படவில்லை. கோவில் மற்றும் படகு தளத்துக்கு செல்லும் சாலைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பிரதமர் மோடியின் வருகை முழுக்க முழுக்க தனிநபர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதால், செய்தியாளர்கள் உட்பட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு, பல்வேறு ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. நேற்று முதல் ஜூன் 1ம் தேதி மதியம் வரை விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளும் பிரதமர், அன்று மாலை 3:00க்கு திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கி விட்டு கரை திரும்புகிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
தியானம்; விவேகானந்தர் பாறைக்கு வந்த மோடி, உள்ளே சென்று தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில், இரவு 7:00 முதல் 7:30 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அறைக்கு திரும்பிய அவர், இன்று அதிகாலை சூரிய உதயத்தை தரிசித்தார். தொடர்ந்து காலை காவி உடை அணிந்த நிலையில் ஓம் மந்திரம் பின்னணியில் முழங்க, விவேகானந்தர் சிலை எதிரே அமர்ந்து தியானம் செய்து வருகிறார். நேற்று இரவு தொடங்கிய தியானம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.