மூன்று நாள் தியானத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார் பிரதமர்; திருவள்ளுவரை வணங்கி திரும்பினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2024 03:06
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தனது மூன்று நாள் தியானத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். திருவள்ளுவரை வணங்கிய பின் திருவனந்தபுரம் சென்றார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். பிரதமர் மோடி குளித்து காவி உடை அணிந்து நெற்றியில் விபூதி பட்டை போட்டு அதன் நடுவில் குங்குமம் வைத்தார். பின்னர் கையில் ருத்திராட்ச மாலையை விரலால் உருட்டியபடி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு சூரிய நமஸ்காரம் செய்து இரண்டு கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை வணங்கினார்.பின்னர் சிறிய சொம்பில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை தீர்த்தம் என்று கூறப்பட்டது. இதை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தின் உள்ளே உள்ள விவேகானந்தர் சிலையின் முன்பு எதிரே சம்மனமிட்டு தரையில அமர்ந்த பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது மண்டபத்தில் மனதுக்கு இதமான ஓம் என்ற பிரணவ மந்திரம் ஆடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 01) 3வது நாளாக பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். தனது மூன்று நாள் தியானத்தை வெற்றியுடன் நிறைவு செய்த பிரதமர், 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வணங்கினார். பின், விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.