மேட்டுப்பாளையம் தங்க விநாயகர், தங்க மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 03:06
அவிநாசி; எஸ். மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க முருகன், ஸ்ரீ தங்க மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம், செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ். மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை தங்க முருகன், ஸ்ரீ தங்கமாரியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விஜயகுமார சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பின்னர், 10ம் தேதி முதல் கால யாக வேள்வி பூஜையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மிருத்ஸங்கிரஹணம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம், நவக்ரஹ ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. 11ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையில் வேதிகார்ச்சனை, கோபுர கலசம் ஸ்தாபனம் ,ஸ்ரீ ஸகஸ்ர நாம பாராயணம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க மாரியம்மன், ஸ்ரீ தங்க முருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.