பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 15 லட்சத்து, 92 ஆயிரத்து, 550 ரூபாய் ரொக்கப்பணம், 9.3 கிராம் தங்கம், 13 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியது கணக்கிடப்பட்டது. நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இரண்டு மாத இடைவெளியில், பக்தர்கள் காணிக்கை தொகை கணக்கிடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகை, பணம் கணக்கிடும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மண்டல உதவி கமிஷனர் விஜயரங்கதுரை, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பணம், நகை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. கோவில் பக்தர்கள், கணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில், பக்தர்களின் காணிக்கையாக, 15 லட்சத்து, 92 ஆயிரத்து, 550 ரூபாய் செலுத்தியது கணக்கிடப்பட்டது. தங்கம், 9.3 கிராம், வெள்ளி, 13 கிராம் காணிக்கையாக செலுத்தியதும் கணக்கிடப்பட்டது. இதற்கு முன், செப்டம்பர் மாதம் கோவில் உண்டியல் காணிக்கை தொகை கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.