பழநி: பழநி பெருமாள் கோயிலில் நவ.11-ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பழநி கோயிலின் உப கோயிலான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் மேல ரத வீதியில் உள்ளது. இக்கோயிலில் கோபுரங்களில் வர்ணம் பூசுதல், புதிய தளம் அமைத்தல், முன் மண்டபம் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தெற்கு பிரகாரத்தில் 10 லட்ச ரூபாய் செலவில் சக்கரத்தாழ்வார் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட திருப்பணிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம்: கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை அனுமதி பெறுதல், திருக்குடங்களில் திருவருள் எழுந்தருள செய்தல், திவ்ய பிரபந்தங்கள், சாற்று முறையும், 10-ல் புதிய விக்ரகங்கள் நீரில் இருந்து எடுத்தல், கோபுர கலசம் வைத்தல், மூன்றாம் கால வேள்வியும், நவ. 11-ல் காலை 9.15க்கு திருக்குடங்கள் புறப்பாடு, காலை 9.55 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் லட்சுமி நாராயணபெருமாள் நான்கு ரத வீதிகளில் திரு உலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்து வருகிறார்.