பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
05:06
மேட்டுப்பாளையம்; திம்மம்பாளையத்தில், திருப்பணிகள் முடிந்த செல்வ விநாயகர், மாகாளியம்மன் அம்மசியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் வரும், 17ம் தேதி நடக்கிறது. இதை அடுத்து யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
காரமடை அருகே மருதுார் ஊராட்சி, திம்மம்பாளையத்தில் செல்வ விநாயகர், மாகாளியம்மன் அம்மச்சி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் நடந்தன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும், 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாவை அடுத்து, யாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. யாகசாலையில், 12 குண்டங்கள், நான்கு வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையின் மையப் பகுதியில், இரண்டு வேதிகையில் பத்மபீடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் யாக குண்டங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. வரும் 15ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் முதல் கால வேள்வி பூஜை துவங்குகிறது. 16ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசம் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாற்றுதலும் நடக்க உள்ளது. வரும் 17ம் தேதி காலை நான்காம் கால வேள்வி பூஜை முடிந்த பின், தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்திற்கும், சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோவை சரவணம்பட்டி கவுமார மடாலய சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் முன்னிலையிலும், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையிலும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.