பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
11:06
வரலாற்று பிரசித்தி பெற்ற லக்குன்டி கிராமத்தை, கோவில்களின் சொர்க்கம் என அழைக்கின்றனர். ஹம்பிக்கு உள்ள முக்கியத்துவம், மகத்துவம் லக்குன்டிக்கும் உள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரியாமல், இலைமறை காயாக இருப்பது வருத்தமான விஷயமாகும். மன்னராட்சி மறைந்து, மக்களாட்சி மலர்ந்து பல காலம் ஆகின்றன. ஆனால் மன்னர்களின் சிறப்பான ஆட்சி, கட்டிய கோவில்கள், குளங்கள், கிணறுகள், மண்டபங்கள், கோட்டைகள் என, பல விஷயங்கள் இன்றைக்கும், அவர்களின் பெருமைக்கு சான்றாக நின்றுள்ளன. மன்னராட்சி எப்படி இருந்தது என்பதற்கு, பக்தியின் வெளிப்பாடு எப்படி இருந்தது என்பதற்கு, இவர்கள் கட்டிய கோவில்கள் அடையாளமாக இருந்தன
சேரன், சோழர், பாண்டியர்கள், கங்கர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசர்கள் அற வழியில் நடந்தனர். கோவில்களை கட்டி குடிமக்களை பக்தி மார்க்கத்தில் அழைத்து சென்றனர். கர்நாடகாவின் பல மாவட்டங்களில், புராதன கோவில்கள், கோட்டைகளை காணலாம். லக்குன்டியிலும் இத்தகைய கோவில்கள் உள்ளன. கதக் நகரில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் லக்குன்டி கிராமம் உள்ளது. வரலாற்று புகழ்மிக்க இந்த கிராமத்தை, கோவில்களின் சொர்க்கம் என்றே அழைக்கின்றனர். கல்வெட்டு சாசனத்தில் குறிப்பிட்டுள்ள படி, இந்த கிராமத்தை முதலில் லோகி கன்டி என, அழைத்தார்களாம். 1,000 ஆண்டுகளுக்கு முன், இது முக்கியமான நகரமாக இருந்தது. அற்புதமான சிற்ப கலைகள், கலை நயத்துடன் கட்டப்பட்ட, பல ஹிந்து கோவில்கள், ஜெயின் கோவில்களின் தாயகம் லக்குன்டி. சாளுக்கியர்களால் கட்டப்பட்ட நுாற்றுக்கணக்கான கோவில்கள், புராதன கிணறுகள் உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான கதைகள் கூறுகின்றன. கோவில்கள் ஒன்றை விட மற்றொன்று அழகாக தோன்றுகிறது. ஆனால், இப்போது வெறும் 40 முதல் 50 கோவில்கள், கிணறுகள் மட்டுமே உள்ளன.
கோவில்களின் சிற்பக்கலையை கண்டு மயங்காதோர், இருக்க முடியாது. ஒருமுறை லக்குன்டிக்கு வந்து, கோவில்களை தரிசனம் செய்தால், மனதுக்கு மகிழ்ச்சி, நிம்மதி, அமைதி கிடைப்பதை உணரலாம். இவற்றில் காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும். மிகவும் விஸ்தாரமாக, கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஹலகுந்தா பசவண்ண கோவில், லட்சுமி நாராயணர் கோவில், விருபாக்ஷா கோவில், மல்லிகார்ஜுனர், மணிகேசவர், காசி விஸ்வநாதர் உட்பட பல்வேறு கோவில்கள் உள்ளன. லக்குன்டியில் சிவன் கோவில்களே அதிகம். அனைத்துமே சிற்பங்கள் நிறைந்துள்ளன. கர்நாடகாவின் பாரம்பரியத்தை உணர்த்துகின்றன. சில கோவில்கள், தொல் பொருள் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், பல கோவில்கள் சரியான பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கின்றன. இவற்றை பாதுகாக்கும்படி வரலாற்று வல்லுனர்களும், லக்குன்டி மக்களும் வலியுறுத்துகின்றனர். ஹூப்பள்ளி, ஹொஸ்பேட், கொப்பால், கதக் என, பல்வேறு இடங்களில் இருந்து லக்குன்டிக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. சொந்த வாகனத்திலும் செல்லலாம்.