பதிவு செய்த நாள்
20
ஜூன்
2024
04:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவரின் வலது பக்கத்தில் உள்ள சாமி சன்னதி கோஷ்டத்தில், 300 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் மன்னர் காலத்தில், சுமார் ஒரு அடி உயரமுடைய கருங்கல்லாலான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, கோவிலுக்கு வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் சாமி கும்பிடுவது போல நடித்து, ஆஞ்சநேயர் சிலையை திருடி காரில் தப்பி சென்றனர்.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஆஞ்சநேயர் சிலையை திருத்தணியை சேர்ந்த நீலகண்டன், வேலுாரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக வைத்திருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். இவ்வழக்கு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும், மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி அளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆஞ்சநேயர் சிலையை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருட்டு போன ஆஞ்சநேயர் சிலையை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.