ராமாயண காலத்தில் ராமர், மனைவி சீதை, சகோதரர் லட்சுமணன் ஆகியோருடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். வனவாசம் செல்லும் வழியில் பல இடங்களில் தங்கியதாக புராண வரலாறு கூறுகின்றன. அதில் ஒரு இடம் கர்நாடகாவின் துமகூரில் உள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.
துமகூரு அருகே உள்ளது தேவராயன துர்கா மலை. இந்த மலையின் அடிவாரத்தில் நாமத சிலுமே என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பாறையில் இருந்து வெளியேறும் இயற்கை நீர் ஊற்று உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் வனவாசம் சென்றபோது இந்த இடத்தில் தங்கி உள்ளனர். ராமர், தனது நெற்றியில் சந்தன திலகமிடதண்ணீர் தேடினார். தண்ணீர் கிடைக்காததால் அங்கு இருந்த ஒரு பாறையின் மீது அம்பு எய்தினார். அந்த பாறையில் ஒரு துளை விழுந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியது. அந்த தண்ணீரை பயன்படுத்தி நெற்றியில் குங்கும திலகமிட்டார். தற்போதும் அந்த பாறையில் இருந்து ஊற்று தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. வறட்சி நிலவினாலும் கூட, அந்தப் பாறையில் இருந்து தண்ணீர் வருகிறது. இதை பார்க்க சுற்றுலா பயணியர் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். நாமத சிலுமே அருகில் புள்ளிமான் பூங்காவும் உள்ளது.
மேலும் மருத்துவ தாவரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 20 ஏக்கர் தோட்டமும் உள்ளது. இங்கு சுமார் 300 வகையான அரிய வகை தாவரங்கள் உள்ளன. காயங்கள், விஷத்திற்கு எதிரான மருந்துகள், எலும்பு கோளாறுகள் போன்ற மனிதனின் பொதுவான நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் ஆயுர்வேத செடிகளை வீட்டிற்கும் எடுத்து செல்லலாம். பெங்களூரில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் நாமத சிலுமே அமைந்துள்ளது. பஸ்சில் செல்பவர்கள் துமகூரு சென்று அங்கிருந்து செல்லலாம். காரில் சென்றால் நேராக நாமத சிலுமே சென்றடையலாம்.