பதிவு செய்த நாள்
28
ஜூன்
2024
04:06
மதுரை : மதுரையில் வைகை ஆற்றங்கரையோரத்தை ஒட்டி பழமையான கோயில்கள் இருப்பதால் அவற்றை ஒருநாள் ஆன்மிக சுற்றுலா திட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிக்க வேண்டும்.
மதுரை கோச்சடை ரோட்டில் சென்றால் துவரிமானில் இருந்து வைகை ஆற்றங்கரையின் அதிசய கோயில்களை தரிசிக்கலாம். கிருதுமால் நதியின் உற்பத்தி மையமான துவரிமானில் இருந்து இருபக்கமும் வயல்வெளிகளின் அழகை ரசிக்கலாம். மேலமாத்துாரில் சிவன் கோயில், கொடிமங்கலம், திருவேடகம், சோழவந்தான், தென்கரை, குருவித்துறை வரை வழிநெடுக சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. திருவேடகம், சோழவந்தான், தென்கரை, குருவித்துறை கோயில்கள் தெப்பக்குளமும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன்கோயில்கள் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது மதுரையின் பெருமை.
இந்த கோயில்கள் செல்லும் வழியில் மேலக்கால், திருவேடகம் பகுதியில் வாழை நார் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு கூடம் உள்ளது. சோழவந்தான், முள்ளிப்பள்ளத்தில் தென்னந்தோப்புகளையும் தென்னையில் இருந்து வெல்லம் தயாரிப்பு, நாரிலிருந்து தோட்டப்பொருட்கள் தயாரிப்பு கூடத்தையும் பார்வையிடலாம். புவிசார் குறியீடு பெற்ற சோழவந்தான் வெற்றிலை கொடிக்கால்களை பார்வையிடலாம். ஆன்மிகத்தோடு கிராமத்து அழகையும் ஒருசேர அனுபவிக்கும் இடமாக துவரிமான் முதல் சோழவந்தான் வரை உள்ளதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல நரசிங்கம் கோயில், திருமோகூர், திருவாதவூர் பெருமாள், சிவன் கோயில்களுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இருந்து ஒருநாள் செல்லும் வகையில் புதிய சுற்றுலா திட்டத்தை கொண்டு வரலாம். மதுரையில் ஆடி அம்மன் கோயில் சுற்றுலா பிரபலமான நிலையில் துவரிமான் - சோழவந்தான், நரசிங்கம் - திருமோகூர், திருவாதவூர் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.