200 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஆதிகேசவ பெருமாள் கோவில்; நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2024 12:07
திருவாலங்காடு; திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலையில், கொற்றலை ஆற்றங்கரையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு இந்த கோவிலில் பிரம்மோற்சவம் அன்று அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்க அப்பகுதிவாசிகள், திருப்பணி கமிட்டி அமைத்தும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், அறநிலையத் துறையினர் பழமை வாய்ந்த இந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலை மீட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி; பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், 1,700 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலை பற்றிய குறிப்பு செப்பேடுகள் மற்றும் கல்வெட்டில் ‘ராமசந்திரநல்லுார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த கோவிலில், தற்போது ஆலமர வேர் கட்டடத்திற்குள் புகுந்துள்ளதால், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆலமர வேரால் கட்டடம் உறுதித் தன்மையை இழந்தும் வருகிறது. பழமையும் பெருமையும் வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவதால், உள்ளூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.