பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
12:07
பெங்களூரில் இருந்து, 184 கி.மீ., துாரத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தின், கோரவங்களா கிராமத்தில், பூசேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. 12ம் நுாற்றாண்டில் ஹொய்சாளா கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஹிந்து கோவில். இரண்டாம் வீர பல்லால மன்னரின் ஆட்சிக் காலத்தில், புச்சி என்ற செல்வந்தரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இங்குள்ள இரண்டு சன்னிதிகள், ஒன்றுக்கொன்று எதிரெதிரே அமைந்துஉள்ளன. ஒரு சன்னிதி, பெரிய மண்டபத்திற்கு அடுத்துள்ள கருவறை, கிழக்கு நோக்கி திறக்கப்பட்டு, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சன்னிதி, இரண்டு நுழைவு வாயில்களுக்கு அருகில், சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ராமாயணம், மஹாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கும் வகையில், சைவம், வைணவம், சக்தி மற்றும் வேத தெய்வங்களின் விக்ரஹங்கள், மிகவும் கலை நயத்துடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சின்னமாக, இக்கோவில் பாதுகாக்கப்படுகிறது. ஹொய்சாளா மன்னர் இரண்டாம் வீர பல்லாலாவின் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில், பூசேஸ்வரா கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. கோரவங்களா என்பது, 14ம் நுாற்றாண்டுக்கு முன்பு, முக்கிய நகரமாக இருந்தது. இந்த கிராமத்தில், மொத்தம் ஆறு ஹிந்து கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான முறையில், தனி தனி கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில், பூசேஸ்வரா கோவிலின் கலை நயத்தை பார்க்கவே பக்தர்கள், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருவதுண்டு. பெங்களூரில் இருந்து, ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ஏற்றது என்று சொல்லலாம். சொந்த வாகனத்தில் செல்வோர், ஹாசன் சென்று, அங்கிருந்து 12 கி.மீ., துாரம் பயணம் செய்தால், கோரவங்களா கிராமம் வந்துவிடும். பஸ், ரயிலில் செல்வோர், ஹாசன் வரை சென்று, அங்கிருந்து, உள்ளூர் பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.