பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
03:07
திருப்பூர்; நல்லகட்டிபாளையம் ஸ்ரீதொட்டைய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லகட்டிபாளையம். அங்குள்ள, ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீதொட்டைய சுவாமி கோவில் மற்றும் புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழாக்குழுவினர் மற்றும் மாளவக்குல மக்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கதித்தமலை அர்ச்சகர் ராஜரத்தின சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், யாகசாலை வேள்வி பூஜைகளை மேற்கொண்டனர். முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பயறு இடுதல், முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சியை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கின. கடந்த 7ம் தேதி துவங்கிய பூஜைகளில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி, சிறப்பு ேஹாம பூஜைகள் நடத்தினர். ஐந்து கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, இன்று அதிகாலை, 6:30 மணிக்கு, ஆறாம்கால வேள்வி பூஜை துவங்கியது. நிறைவேள்வியை தொடர்ந்து, யாகசாலையில் இருந்த கலசங்கள் மேள, தாளத்துடன் புறப்பட்டன. தொடர்ந்து, 9:15 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், தொட்டைய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ‘அரஹர தொட்டைய சுவாமி’ என்று கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, தசதானம் மற்றும் தசதரிசன பூஜைகளும், மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன; பக்தர்களுக்கு காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பெரியதனம் தேவராஜ், இணை பெரியதனம் வேலுசாமி, கோடகிநாயக்கர் பழனிசாமி, கவுரவ தலைவர் கடை சுப்பாநாயக்கர், குடைக்காரர் பழனிசாமி மற்றும் விழாக்குழுவினர், மாளவக்குல மக்கள் செய்திருந்தனர்.