ஆழ்வார்கள் விஷ்ணுவை பரம்பொருளாகப் பாடி வைத்தார்கள். நாயன்மார்கள் சிவபரமாகப் பாடினார்கள். வேதம் சகலதெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷதம் என்று போனால் அங்கே தெய்வம் பற்றி அதிகம் பேச்சில்லாமல், எல்லாம் ஆத்ம தத்துவமாக சொல்லியிருக்கிறது. இங்கே திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்துவம் இவைகளைப் பற்றி சொல்லியிருந்தாலும் அதை விட ரொம்ப அதிகமாக தர்மம், நன்னெறி இவற்றையே சொல்கிறார். இன்னொரு பக்கம் திருமூலரைப் பார்த்தால் பிராணாயாமம், தியானம், தாரணை, சமாதி இத்யாதி யோக சமாச்சாரங்கள் தான் நிறைய வருகின்றன. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது? என்று கேட்டால், எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. நாம் எடுத்துக் கொண்டதை நடுவில் விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டேயிருந்தால், முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதை அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்று தான். -காஞ்சி பெரியவர்.