பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பதிவு செய்த நாள்
30
மார் 2026 10:03
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார், கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, நேற்று வீர மக்களுக்கு காப்பு அணி வித்தல், மஞ்சள் நீராட்டுதல், பொங்கல் வைத்தல், இரவு வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இசையுடன் அம்மன் புறப்பாடு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை அதிகாலை வீர மக்கள் குண்டம் இறங்குதல், அன்று மாலை தேரோட்டம் உள்ளிட்டவை நடக்கின்றன. திருப்பூர், அவிநாசி, சேவூர், குன்னத்துார், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். வீர மக்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் வீர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முகாம் அமைத்து உள்ளனர். அவிநாசி தீயணைப்பு வண்டி பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒரு ஏ.டி.எஸ்.பி தலைமையில் இரண்டு டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர், 29 சப் இன்ஸ் பெக்டர், 236 போலீசார், 100 ஊர் காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இன்று மதியம் முதல் 31 ம் தேதி இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து ஈரோடு, சேலம், கோபி, குன்னத்துார் செல்லும் வாகனங்கள் பி.என்.ரோடு பூலுவபட்டியில் இருந்து, நெருப்பெரிச்சல், வாவி பாளையம், கணக்கம் பாளையம் வழியாக பெருமாநல்லுார் விவசாயிகள் நினைவு ஸ்துாபி வழியாக செல்ல வேண்டும். கோவையில் இருந்து, ஈரோடு, சேலம் செல்லும் பஸ்கள் பெருமாநல்லுாருக்குள் வராமல் குன்னத்துார் பாலம் ராஜா பேக்கரி சந்திப்பில் பயணிகள் இறக்கி விட்டு செல்ல வேண்டும்.
|