பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
11:07
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நேற்று நடந்த அனைத்து ஆன்மிக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறையினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதர்ம காரியங்களில் ஈடுபட்டு, அதிகப்படியான செலவு கணக்குகளை காட்டி வருகின்றனர். கோவில்களை லாபம் ஈட்டும் வியாபார தலங்களாக மாற்றி விட்டனர். அறநிலையத்துறை கோவில்களுக்கு, கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் நிர்வாக வரி என, 420 கோடி, ஆடிட் வரி என, 127 கோடி ரூபாய் வசூல் செய்தனர். இந்த அரசு, நிர்வாக வரி, 428 கோடி ரூபாய், ஆடிட் வரி, 228 கோடி ரூபாய் என, 656 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது.
கோவிலுக்கு அரசு வரி விதிப்பது என்பது கொலையை காட்டிலும் ஒரு கொடூரமான செயல். தமிழகத்தில், சைவ, வைணவ மடங்களுக்கு சொந்தமான கோவில்களையும், நிலங்களையும் தன் பிடிக்குள் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. பக்தர்களின் நிதியில் நிர்வகிக்கப்படும் கோவில்களில், சிலரது பிறந்த நாளில் சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கண்டெடுக்கப்பட்ட சுவாமி திருமேனிகள், வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட தெய்வத்திருமேனிகள் தமிழகத்தில் பல உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த கோவில்களுக்கு வழங்கி பூஜை நடத்தியும், பக்தர்கள் வழிபடவும் அனுமதிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பின், மீட்கப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் உள்ள ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழமையான கோவில்களுக்கான புனரமைப்பு நிதிகளை முழுமையாக ஒதுக்கீடு செய்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் களவுபோன தொன்மையான தெய்வத்திருமேனிகள் உலகின் பல அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.