பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
11:07
புரி: ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுக்கவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், ரத்ன பண்டார் எனப்படும் பொக்கிஷ அறை நேற்று திறக்கப்பட்டது.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புரியில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில் விலை உயர்ந்த வைர, வைடூரியங்கள், தங்க நகைகள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த பொக்கிஷ அறையின் உட்பகுதி பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள விலையுயர்ந்த பொருட்களை கணக்கெடுக்க, ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முந்தைய முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சியின்போது, பொக்கிஷ அறையின் சாவிகள் தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும், இது முக்கிய விஷயமாக முன்வைக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொக்கிஷ அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத் ரத் தலைமையில், 16 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, 1978ல் இந்த பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இதற்கு, 46 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், இந்த அறை நேற்று திறக்கப்பட்டது. இதற்காக நேரம் குறிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று மதியம் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத் ரத், ஜெகன்னாதர் கோவில் நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாகி அரபிந்த பாதே, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி. கதநாயக், புரி பட்டத்து அரசர் கஜபத் மகராஜின் பிரதிநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவிலில் பூஜை செய்யும் நான்கு மூத்த பூசாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளதாவது: தற்போது உடனடியாக கணக்கெடுப்புகள் நடத்தப்படாது. பொக்கிஷ அறையில் உள்ள பொருட்கள், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்து பாதுகாக்கப்படும். பொக்கிஷ அறையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், இந்தப் பெட்டிகள் தற்காலிக பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்படும். அதுவரை, பலத்த பாதுகாப்புடன், தற்காலிக அறையில், இந்த பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும். சிசிடிவி கேமரா கண்காணிப்புடன், அந்த அறைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.