பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
03:07
ஆடி மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணம் குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு, 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆடி மாத ஆன்மிக பயணம் நான்கு கட்டங்களாக, வரும், 19, 26 மற்றும் ஆக., 2, 9ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 - 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள், வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பக்தர்கள் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 - 70 வயதுக்கு உட்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வயது சான்றிதழ் இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்; சிறு குழந்தைகளை அழைத்துவர அனுமதியில்லை. ஆதார் கார்டு அல்லது பான்கார்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோவில் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஹிந்து சமய அறநிலையத் துறை வலைதளம், hrce.tn.gov.in, வாயிலாக பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். விண்ணப்பத்துடன், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமான சான்று பெற்று இணைக்க வேண்டும். பக்தர்கள் ஒரு முறை மட்டுமே, இப்பயணத்தில் பங்கேற்க முடியும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கோவில்களில் பிளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்கு வருவோரிடம் இத்திட்டம் குறித்து விளக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -