யசோதையின் வீட்டுக்கு தானாகவே தேடி வருகிறான் கண்ணன். பல சேஷ்டைகள் செய்கிறான். தொல்லை தாளாமல் அவனை உரலில் கட்டிப்போட ஏற்பாடு செய்தாள். கயிறை எடுத்து வந்தாள். ஒரு அங்குலம் குறைந்தது. வேறு கயிறை எடுத்து வந்தாள், அதுவும் அதே அளவு குறைந்தது. திரும்பவும் இன்னொரு கயிறைக் கொண்டு வந்தாள். அதே நிலை தான்...இப்படி மாறி மாறி அலைந்து அவளுக்கு மூச்சிறைத்து விட்டது. அம்மா படும் பாட்டைப் பார்த்து பிள்ளைக்கு கஷ்டமாகி விட்டது. அடுத்து தூக்கி வந்த கயிறுக்கு அவனாகவே கட்டுப்பட்டான். உரலில் கட்டிவிட்டு, மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்வது, வைக்கோலைப் போடுவது, கன்றுகளை குளிப்பாட்டுவது என்று வேலையில் மூழ்கிவிட்டாள் யசோதை. இதைப் பார்த்த கண்ணன் தலையில் அடித்துக் கொண்டான். ஏன் இப்படி செய்தாய்? என்றாள் யசோதை. அம்மா! நானே (கடவுளே) உன்னை தேடி வந்திருக்கிறேன். அப்போதும் கூட, உன் வழக்கமான பணம் சம்பாதிக்கும் வழி தான் உன் கண்ணை மறைக்கிறது. வழக்கமான லவுகீக காரியங்களையே செய்கிறாய். இப்போது கூட, என்னை தாலாட்டி சீராட்டி கொஞ்சி மகிழாமல் உலக காரியங்களையே செய்கிறாயே! என்றான். உலக காரியத்தில் ஈடுபட்டால் பக்தி நம்மைவிட்டு போய்விடும். இறைவனை அடைய வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், உலக காரியங்களில் இருந்து குறிப்பிட்ட வயதிலாவது விடுபட்டாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.