பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
10:07
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய், வெள்ளியில் அம்மனுக்கு கோயில்களில் வளைகாப்பு நடைபெறும். ஆடிப்பூர நன்னாளில் தான் ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்தாள். ஆடி மாதத்தில் எல்லா கோயில்களுமே திருவிழா காணும்.
ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை தட்சிணாயன காலம் என்பர். தட்சிணம் என்றால் தெற்கு. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்றும், தென்னக ரயில்வேயை தட்சிண ரயில்வே என்றும் சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தைமுதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு குறிப்பாக மாரி, காளி போன்ற தனி பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. கூழ்வார்த்தல், பொங்கல் இடுதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நேர்த்திகடன்களை ஆடியில் பக்தர்கள் நிறைவேற்றுவர். அம்மனும், சுவாமியும் வீற்றிருக்கும் கோயில்களில் அம்மனுக்கு தனிவிழாவாக முளைக்கொட்டு விழா ஆடியில் நடத்துவர். ஆடியில் அம்மனை வழிபட தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்!