பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
04:07
கோவை, சுல்தான்பேட்டை, வதம்பச்சேரியில் அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது; ஒவ்வொரு ஆண்டும் ஆடி வெள்ளிக்கிழமை தினங்களில் ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, வதம்பச்சேரி நல்லூர்பாளையம் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அழகுநாச்சி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி முதல் மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தியபடி, அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இக்கோவிலில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: பல நூறு ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் படை, நல்லூர் பாளையம் கிராமம் வழியாக சென்றது. படையில் இருந்த சில வீரர்கள், இங்கிருந்து பெண்கள் பலரிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த பெண்கள், அழகு நாச்சி அம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். பெண்களை விரட்டியபடி கோவிலுக்குள் வந்த படைவீரர்களுக்கு கண்பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் சரியாகும் என கிராம மக்கள் கூறியதை தொடர்ந்து, அவர்களுக்கு கண் பார்வை சரியானது. கோவிலுக்குள் பெண்கள் தஞ்சம் அடைந்ததன் காரணமாக, இங்குள்ள அம்மனுக்கு அடைக்கல அம்மன் என்ற பெயரும் உள்ளது. கண்பார்வை திரும்ப கிடைத்ததன் காரணமாக, ஆங்கிலேயர்கள், அழகு நாச்சியம்மனுக்கு பட்டு, கதர் சேலைகள் வழங்கி அம்மனை வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்தது ஆடி மாதம் என்பதால், ஆண்டுதோறும் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி, அழகு நாச்சியம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்றனர். முன்னதாக, ஆங்கிலேயர் வழங்கிய புடவையுடன், சிறப்பு அலங்காரத்தில் அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.