பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
05:07
பொள்ளாச்சி; ஆடி மாதத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் இம்மாதத்தில் நடக்கிறது. ஆடி மாதம் முழுவதும் வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
* சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்புள்ள பீடத்தில், மழையையும் பொருட்படுத்தாமல், உப்பை கொட்டி நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள், பலருக்கும் கூழ் வழங்கி வழிபாட்டனர்.
* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஒன்பது வகையான அபிேஷகம், மலர் மாலைகளால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை; * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடைபெற்றது. எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு; * கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. பகதர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை; உடுமலை, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள், விளக்கு போடுவதும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் வழிபட்டனர்.
* நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில், தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சுவாமிக்கு கிளிபச்சை நிற பட்டுடுத்தி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
* தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன், சங்கிலி நாடார் வீதி பத்ரகாளியம்மன், குட்டைத்திடல் துர்க்கையம்மன், கல்பனா ரோடு காளியம்மன் கோவில்களில் அம்பாள் வண்ண வண்ண பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.
* குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சுவாமிகளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. குறிஞ்சேரியில் சுயம்புவாக அவதரித்துள்ள பூமிலட்சுமி அம்மன் கோவிலில், அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.
* தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், ரத்னாம்பிகை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. முத்தையா பிள்ளை லே–அவுட் சக்தி விநாயகர் கோவில் அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
* காந்திநகர் இரண்டாவது வீதி மங்கள விநாயகர் கோவிலில் விசாலாட்சி அம்மனுக்கு வளையல் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியும், புதிதாக வேண்டுதல் வைத்தும் வளையல்களை வழங்கி வழிபட்டனர்.
* சின்னபொம்மன்சாளையில், செல்வமாரியம்மன் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆடி வெள்ளியில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வரும் அம்மனின் அருள் வேண்டி, சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
பக்தர்கள், விளக்கேற்றியும், மங்கள கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல்கள் என மங்கலப் பொருட்களை வழங்கியும், கூழ், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை படைத்தும் வழிபட்டனர்.