பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
05:07
பெரம்பலுார்; ஆடி முதல் வெள்ளியையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ரூ.2.56 லட்சம் பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
அரியலுார் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ரூ.2.56 லட்சம் பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலுார் எண்ணெய்காரத் தெரு மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளியையொட்டி பால்குட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலுார் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோவிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல, பழைய அங்கனுார், சின்ன ஏரிக்கரை மாரியம்மன், ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மகா சக்தி மாரியம்மன், மறவனுார் மாரியம்மன், அண்ணங்கார குப்பம் சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.