திருப்புவனம்; ஆடி வெள்ளியை முன்னிட்டு மடப்புரத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிற்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் ஆடி மாதங்களில் அம்மனை வழிபட்டால் வேண்டிய வரம் தருவாள் என்பது நம்பிக்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உச்சி கால பூஜையில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். மதியம் ஒரு மணிக்கு விநாயகருக்கு பூஜை செய்த பின் அடைக்கலம் காத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஐந்து முக தீபம் காட்டப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கின. மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது பெண்கள் பலரும் அருள் வந்து ஆடினர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. முதியோர்கள், மாற்றுதிறனாளி பக்தர்கள் தனி வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் வரை மினி பஸ் நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணத்துடன் இயக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஷேர் ஆட்டோ, டூவிலர் உள்ளிட்ட வற்றை குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதிக்கவில்லை. மின் பஸ் கோயில் வாசல் வரை சென்றதால் பெண் பக்தர்கள் பலரும் மினி பஸ்சில் விரும்பி பயணம் செய்தனர். ஆடிவெள்ளி உள்ளிட்ட விசேச தினங்களில் அம்மனுக்கு கிரீடம் அணிவிக்கப்படும், ஆடி முதல் வெள்ளியான நேற்று அம்மனுக்கு கிரீடம் அணிவிக்கப்படாதது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.