பதிவு செய்த நாள்
20
ஜூலை
2024
12:07
புரி : “ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் உள் அறைக்குள், எந்தவித ரகசிய சுரங்கப்பாதையும் இல்லை,” என, பொக்கிஷ அறைகளை திறக்கவும், கணக்கெடுக்கவும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் தெரிவித்து உள்ளார். ஒடிசாவின் புரி மாவட்டத்தில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பொக்கிஷ அறை, இரு பிரிவுகளை கொண்டது.
11 பேர் குழு; வெளிப்புற மற்றும் உள் அறைகளில், விலையுயர்ந்த ஆபரணங்களும், உள் அறைக்குள் ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாகவும் காலங்காலமாக பேசப்பட்டு வந்தது. சட்டசபை தேர்தலில், பா.ஜ., அளித்த வாக்குறுதியின்படி, ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையை திறக்கவும், நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கணக்கெடுத்து மதிப்பிடவும், ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில், 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.சமீபத்தில் இந்த குழு முன்னிலையில், பொக்கிஷ அறையின் வெளிப்புற மற்றும் உள் அறைகள் திறக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் பாதுகாப்பாக வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
கணக்கெடுப்பு; இந்நிலையில், பொக்கிஷ அறையை திறக்கவும், கணக்கெடுக்கவும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் கூறுகையில், “உள் அறையில் ஏழு மணி நேரத்துக்கும் மேல் இருந்தோம். அங்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்,” என்றார். புரியின் பட்டத்து அரசர் கஜபதி மகாராஜா திவ்ய சிங்க தேப் கூறுகையில், “பொக்கிஷ அறையின் உள் அறையில் சுரங்கப்பாதை இல்லை. தேவைப்பட்டால், இந்திய தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தலாம்,” என்றார்.