காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருட உற்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2024 11:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவத்தின்போது, கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல, ஆனி, ஆடி மாதங்களில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆனி கருடன், ஆடி கருடன் என, கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உற்சவம் கடந்த 15ம் தேதி நடந்தது. ஆடி கருடன் உற்சவம் இன்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, மாலை 5:00 மணிக்கு, பெருமாள், வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு கருடசேவையையொட்டி விசேஷ மலர் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அனந்தசரஸ் திருக்குளம் அருகில், வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு கஜேந்திர மோக்ஷம் நடந்தது. தொடர்ந்து ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து, திருவடிகோவில் வழியாக மாட வீதியில் கருட வாகனத்தில் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வரதராஜ பெருமாளை வழிபட்டனர். இரவு 8:30 மணிக்கு ஆளவந்தார் சாற்றுமறை உற்சவம் நடந்தது.