பதிவு செய்த நாள்
22
ஜூலை
2024
11:07
புட்டபர்த்தி; ‘‘அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்,’’ என, ஹிமாச்சல பிரதேச கவர்னர் சிவ்பிரதாப் சுக்லா, சாய் பிரசாந்தி நிலையத்தில் நேற்று நடந்த குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசினார்.
குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் நேற்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலையில் வேதம், பிரசாந்தி பஜனை குழு சார்பில் குரு வந்தனா நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி ஸ்ரீ எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்புரையில், பகவானின் போதனைகளையும், பகவத் கீதை உட்பட வேதங்களில் உள்ளவற்றையும் மேற்கோள் காட்டி, சத்குருவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஸ் பாண்டியா பேசுகையில், ‘‘குரு பூர்ணிமா என்பது குருவுக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பம். குருகுலத்தில் எந்த நுழைவுத் தேர்வும் இல்லாமல் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரே தகுதி அன்பு... அன்பு... அன்பு மட்டுமே. அனைவரும் பக்தி, சேவை, அன்புடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்,’’ என்றார்.
சிறப்பு விருந்தினரான ஹிமாச்சல பிரதேச மாநில கவர்னர் சிவ்பிரதாப் சுக்லா, மாற்று திறனாளிகளுக்கான சேவை திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: ஒருவர் பக்தியுடன் பகவானின் தாமரை பாதத்தில் தன்னை அர்ப்பணிக்கும் போது, குருவின் ஆசீர்வாதம் உள்ளிருந்து கிடைக்கிறது. பகவானின் போதனைகள் எல்லையற்றது. ‘நர சேவா நாராயண சேவா’ என்ற பழமொழி மூலம், பகவானின் அன்பை கடைப்பிடித்து, அவரது பணியை 140 நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியும். அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். பகவான் பெயரால் அனைத்தையும் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் சேவை செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தெய்வீக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு பின், பகவானின் பிருந்தாவனத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் மீண்டும் வேதம், ரஞ்சனி காயத்ரி குழுவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி, பஜனை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.