திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா; தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2024 11:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி புறப்பாடு: வழக்கமாக மாத கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலையில் கோயிலில் இருந்து புறப்பாடாகிய ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடக்கும். ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு காலை கோயிலில் இருந்து உற்சவர்கள் புறப்பாடாகி சன்னதி தெருவில் உள்ள ஆடிக் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி, பூஜை முடிந்து தங்கமயில் வாகனத்தில் ரத வீதிகளில் புறப்பாடாகினர்.
கலை நிகழ்ச்சிகள்: மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூர் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா நடந்தது. மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், மதுரை அரசு மியூசிம் காப்பாட்சியர் மருது பாண்டியன் பேசினார். மதுரை ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பரமேஸ்வரன் குழுவினர் மங்கள இசை வாசித்தனர். சேதுராமன் குழுவினரின் ஒயிலாட்டம், காவடியாட்டம், மாடாட்டம், கலைச்செல்வி குழுவினரின் பரதநாட்டியம், கோமதி குழுவினரின் வில்லுப்பாட்டு, திண்டுக்கல் கருப்பையா குழுவினரின் சாமியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.